மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதனால் பெரும் அச்ச நிலைமையேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு 8.00 மணியளவில் களுதாவளை, சோமசுந்தரம் வீதியில் உள்ள குறித்த பணிப்பாளரின் வீட்டுக்கு வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டுச்சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்துவந்த இருவர் வெளியில் நின்று பணிப்பாளரை அழைத்தபோது அவர் வெளியில் வந்த நிலையில் துப்பாக்கிசூட்டை நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.