வவுனியா - பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இரவிரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா பாரதிபுரம், விக்ஸ்காட்டுப்பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் சுமார் 44 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வன இலாகாவினரால் தொந்தரவுக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு காணி உறுதிப் பத்திரமோ, வீட்டுத்திட்டமோ இது வரை வழங்கப்படவில்லை எனவும், குறித்த காணிகளை யுத்தத்தின் காரணமாக இடர்பெயர்வுகளைச் சந்தித்து மீள்குடியேறிய தமக்கே வழங்க வேண்டும் எனவும் கோரியே இந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அரசஅதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களது காணியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பல தடவை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகின்றது.
இந்தநிலையில் இன்று மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட இம் மக்கள் அது தொடர்பில் சரியான பதில் கிடைக்காமையால் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும், மாவட்ட செயலகம் அருகில் சுமாதர் 29இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் இரவிரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.