கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! கல்வி அதிகாரிகள் மீது பலத்த கண்டனம்..

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹுவர் தலைமையில் இன்று (22) பிற்பகல் 3.00 மணியளவில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆசிரியர்கள் பலர் ஒலிபெருக்கி மூலம் கல்வித் திணைக்கள அதிகாரிகளை வன்மையாக கண்டித்து, மிகவும் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு உரையாற்றினர்.

தமக்குரிய சம்பள நிலுவையை இழுத்தடித்து, காலம் தாழ்த்தாமல் அதனை வழங்குவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நீடித்ததுடன் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்பாட்டம் தொடர்பில் இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் சுமார் 1200 ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை நீண்ட காலமாக இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் ஏமாற்றமும், விரக்தியுமடைந்துள்ள ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய வேளையில் தரவுகளை அனுப்பாமல் இருந்த வலயக் கல்வி அதிகாரிகளின் அசமந்தப்போக்கே உரிய காலப்பகுதிக்குள் சம்பள நிலுவைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமைக்கு காரணம் என மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர் தொடக்கம் மாகாண ஆளுநர் வரை பல்வேறு உயர் அதிகாரிகளிடம் எமது கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு முயற்சிகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் இன்னும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் கல்முனை வலயத்தில் மாத்திரம் சமபள நிலுவை இழுத்தடிக்கப்படுவதன் மர்மம் என்ன? இங்கு கடமையாற்றிய கணக்காளரை இடமாற்றியது எமது சமபள நிலுவைக்கு ஆப்பு வைப்பதற்குத்தானா? இந்த வலயக் கல்விப் பணிமனையின் செயற்பாடுகள் நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எமக்கு அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அம்பாறை கல்வி வலயத்தில் 100வீதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலுவைகள் வழங்கப்பட்டு அங்குள்ள கணக்காளர் பாராட்டு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையினை எதிர்வரும் இரண்டு வராங்களுக்குள் வழங்காவிட்டால் ஏனைய வலயங்களில் ஆசிரியர்கள் எந்தக் காலப்பகுதியில் சம்பள நிலுவையை பெற்றார்களோ அந்தக்காலப்பகுதியில் இருந்து தற்போது வரைக்கும் நிலுவையுடன் சேர்த்து அனைத்து கொடுப்பனவையும் வழங்கவேண்டும்.

இந்தப் பணத்தினை யார் தவறிழைத்தார்களோ அவர்களது பணத்தில் இருந்து பெற்றுத்தருவதற்கு ஆவன செய்யவேண்டும்.

எமது கோரிக்கை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே.

எமது ஆசிரியர்களை தொடர்ந்தும் ஏமாற்ற முற்பட்டால், எமது இந்த போராட்டம் பல்வேறு வடிவங்களாக மாற்றமடையும் என்பதை அதிகாரிகளுக்கு சொல்லி வைக்கின்றோம் என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments