தொடர் போராட்டத்தினால் பல்வேறு நோய்களுக்கு முகங்கொடுத்துள்ள கேப்பாப்புலவு மக்கள்

Report Print Arivakam in சமூகம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம் எந்தவித தீர்வுகளுமின்றி ஒருமாத காலமாக தொடர்கின்றது

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் உள்ள தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிலக்குடியிருப்புப் பகுதி மக்கள் கடந்தமாதம் 31 ஆம் திகதி இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மக்களின் போராட்டம் இன்றுடன் 28 நாட்களை தாண்டியும் எந்தத தீர்வுகளுமின்றி தொடர்கின்றது.

பிலக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 52 ஏக்கர் காணிகளில் 25.5 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சினூடாக கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாக மாவட்ட அரச அதிபர் கூறியிருந்தார்.

ஆனாலும் குறித்த காணிகள் இதுவரை விடுக்கப்படவில்லை.

பச்சிளம் குழந்தைகளைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் எனப் பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இரக்கமில்லாத அரசு எங்களிடம் ஒப்படைப்பதாக கூறிய காணிகளைக் கூட இன்னமும் விடுவிக்கவில்லை. நாங்கள் எங்களுடைய காணிகளை பெற்றுக்கொள்ளும் வரை எங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சமயத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்கள் தென் பகுதியைச் சேர்ந்த மக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு இப்போராட்டம் எந்த தீர்வுகளுமின்றி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிறுவர்களின் கல்வி மற்றும் போசாக்கு போன்ற விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மக்கள் வீதியோரத்தில் கடந்த ஒரு மாத காலமாக இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் சிறுவர்கள், முதியோர் எனப்பலரும் பல்வேறு வகையான நோய்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments