மன்னார் மாவட்டமும் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

Report Print Ashik in சமூகம்

நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் அரசினால் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ள போதும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை மாத்திரம் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தாமை தொடர்பில் உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மன்னார் மாவட்டமும் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகளின் விவசாயச் செய்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

வறட்சியின் காரணமாக மன்னார் மாவட்ட விவசாயிகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு பல ஏக்கர் விவசாயச்செய்கையும் பாதிப்படைந்திருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகள் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தினால் 16 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தியது.

எனினும் கடுமையாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தாத நிலை ஏற்பட்டிருந்தது.

வறட்சி ஏற்பட்டு பல நாட்களின் பின் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணத்தினால் மன்னார் மாவட்டம் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விடயம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு பட்டினிச்சாவை எதிர் நோக்கிய விவசாயிகளை நான் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு பாதிப்படைந்திருந்த விவசாய செய்கைகளையும் நான் நேரடியாக பார்வையிட்டேன்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக நான் உரிமை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மன்னார் மாவட்டமும் கடுமையாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளேன் என தெரிவித்தார்.

மேலும், இதற்கமைவாக 17 ஆவது மாவட்டமாக மன்னார் மாவட்டமும் வறட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற வறட்சி நிவாரணங்கள் சமனான முறையில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments