கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி : சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினர் வசம் இருந்த மக்களின் காணிகள் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மிகுதி காணிகள் விடுவிக்கப்படாததால், விடுவிக்கப்படாத காணியின் உரிமையாளர்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.

மேலும், அவர்களின் மிகுதி காணிகளின் விடுவிப்பு தொடர்பில் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக இணைப்பு - - முரளி

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து, தமது சொந்த காணிகளை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக முல்லைத்தீவு கேப்பாப்புலவு புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது படையினர் வசமிருந்த குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments