மக்களை ஏமாற்றும் வைத்தியர்! போராட்டத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

கிளொசோ தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று(08) குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இத்தோட்டத்தில் இருக்கின்ற தோட்ட வைத்திய அதிகாரி முறையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையெனவும், இதனால் தாங்கள் சுகாதார விடயத்தில் அதிகமான பாதிப்புகளை சந்திப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் கடந்த 05 ஆம் திகதி 17 வயதுடைய மாணவன் ஆற்றில் குளிக்கச்சென்று சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதன்போது தோட்ட வைத்தியரை அழைத்தபோதும் வைத்தியர் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.

இதனை கண்டித்தும் வைத்தியர் அடிக்கடி தோட்டத்தில் இருப்பதில்லையெனவும், வைத்தியரின் நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, குறித்த வைத்திய அதிகாரியை தோட்டத்தினை விட்டு இடமாற்றம் செய்யுமாறு கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தோட்டத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் ஏற்படும் போது வைத்திய அதிகாரியால் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் அசமந்தபோக்கில் இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பந்தப்பட்ட வைத்தியர் அரசசார்பற்ற நிறுவனங்களை இணைத்துகொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி கடன் வழங்கி அதிகப்படியான வட்டி பணம் அறவிடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பெற்றப்பணத்தினை மீளச்செலுத்த முடியாதவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்வதோடு, வழக்கு தாக்கல் செய்வதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை அடைகின்றனர்.

தோட்ட வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தினை தொடர்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments