எங்களது நிலத்தைதான் கேட்கின்றோம் இராணுவத்தினரின் நிலத்தை அல்ல! கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்

Report Print Arivakam in சமூகம்
23Shares

எங்கள் நிலத்தை கேட்டுத்தான் போராடுகின்றோம், இராணுவத்தின் நிலத்தை நாங்கள் கேட்கவில்லை எனக்கோரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமதுகாணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்த இடத்தில் யுத்தம் நிறைவடைந்து இன்று எட்டு வருடங்களாகியும் தங்களை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்காதது தான் நல்லாட்சி அரசின் நல்லிணக்கமா? எனக் குறித்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேப்பாப்புலவு மக்கள் கேப்பாப்புலவு கிராமம் புலக்குடியிருப்பு சூரிபுரம் கேப்பாப்புலவு ஆகிய கிராமங்களை கொண்டுள்ளபோதும் கேப்பாப்புலவு கிராமானது மிகவும் பழமைவாய்ந்த பூர்வீக விவசாயக் கிராமமாகவே காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் இப்பிரதேசத்தில் கேப்பை (குரக்கன்) பயிரிடப்படும் நிலமாக இருந்தமையால் இதற்கு கேப்பாப்புலவு எனப்பெயர் வந்துள்ளது.

இந்த நிலத்தில் தான் எங்களது பல தலைமுறைகள் வாழ்ந்துள்ளன. அவர்களை தொடர்ந்து நாங்களும் இந்தமண்ணில் வாழ்ந்து தான் இறுதியுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்றோம்.

எங்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்து வந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர். இதில் எப்படி வாழமுடியும்.

நாங்கள் எங்கள் பரம்பரை எமக்கு தேடித்தந்த எங்களது நிலத்தை தான் கேட்கின்றோம். இராணுவத்தின் நிலத்தை கேட்கவில்லை என போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இதேவேளை குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் ஆதரவு வழங்குபவர்களையும் கண்காணிக்கும் கமராக்கள் மூலம் படையினர் அவதானிப்புக்களை மேற்கொண்டு வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments