திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தொடரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,500 இற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர்.
நாங்கள் பட்டம் பெற்று ஐந்து வருடங்களாகியும் நியமனம் கிடைக்கவில்லை. எங்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தை பெற்றுத்தர வேண்டும்.
அரசியல்வாதிகள் எங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அனைவரும் தமது பிரச்சினைகளை கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே தவிர எங்களுக்கான தீர்வினை யாரும் பெற்றுத்தருவதாக இல்லை என குறிப்பிட்டனர்.
எனினும் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு எதற்காக போட்டிப் பரீட்சை வைக்க வேண்டும். அவ்வாறு போட்டிப் பரீட்சையின் அடைப்படையில் தெரிவு செய்யும் போது பலர் புறக்கணிக்கப்படுகின்றனர் என பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மேலும் எமக்கான தீர்வானது எழுத்து மூலம் கிடைக்கப்பெறும் வரை நாங்கள் இந்த போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர்.