வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த வாரம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காலவரையரையற்ற போராட்டம் பத்தாவது நாளாக இன்று மனித சங்கிலிப் போராட்டமாக தொடர்கிறது.
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகிறது.
பட்டதாரிகள் தமது முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் இடம்பெற்றதுடன், இதன்போது வட மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதன்போது மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
'கொடு..கொடு..வேலைகொடு.., வடக்கு மாகாண அரசே தூங்காதே!, பட்டதாரிகள் நடு ரோட்டிலே.. பச்சை வாளிகள் வேலையிலே!, பத்து நாளாய்த் தூக்கமில்லை, பட்டதாரிகளை ஏமாற்றாதே, மத்திய அரசே வேலை கொடு.. மாகாண அரசே முயற்சி எடு!' உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆவேசமாக எழுப்பி இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் அவல நிலையைச் சித்தரிக்கும் கவனயீர்ப்பு வீதி நாடகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.