உலகமெங்கும் இன்று சர்வதேச மகளிர் தினம் பல்வேறு நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள யுவதிகள் மகளிர் தினத்தினை கொண்டாட முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்.குடாநாடு மற்றும் கிழக்கு மாகாணம் உற்பட பல பிரதேசங்களில் தற்போது வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு நியமனங்களை வழங்க கோரி இரவு பகல் பாராது யுவதிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக மூன்று வேளை உணவினையும் சமைத்து வீதியிலே உண்டு வீதியிலே உறங்கி இன்றுடன் 10 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் தாங்கள் சுதந்திரமாக இல்லை என அங்குள்ள யுவதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வீதிகள் இருந்து இரவு பகல் பாராது தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல உடல், உள ரீதியாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வீதியில் உறங்குவதாகவும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் முழு நேரமும் விழிப்புடனேயே தூங்குவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் பெற்றோர்களும் நாங்கள் வீதியில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவதால் எதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி வீட்டுக்கு வருமாறு அழைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் தற்போது யாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற அசம்பாவித சம்பவங்களும், பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களும் தான் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் தற்போது 2 வருடங்கள் ஆகியும் உரிய தீர்வு எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் பாராமுகத்துடன் இருப்பது வேதனையளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் எங்களுக்கு தீர்வு வழங்கப்பட்டாலும், யாழில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறையுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வருமிடத்து சர்வதேச மகளிர் தினத்தை தாங்கள் சுதந்திரமாக கொண்டாட முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.