வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் உட்பட நான்கு பேருக்கு பிணை

Report Print Kumar in சமூகம்
78Shares

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நான்கு பேரும் 20ஆயிரம் ரூபா பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.

பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறலாம்,

மேலும் அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமுற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் சமவுடமைகள் கட்சியின் உறுப்பினர்களான த.கிருபாகரன், டாக்டர் சி.குமாரகே ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது மக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் நடைபெறலாம் என்பதனால் மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரப்பட்ட வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் 05ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.

மேலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலத்தை பதிவுசெய்யுமாறும் உத்தரவிட்டார்.

கடந்த 16 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments