கடற்படையை அகற்றி குடியேற்ற வேண்டும்..! இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்
19Shares

பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

"இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்கு" எனத் தெரிவித்து பூநகரி மகா.வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது பூநகரி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

இதன் போது ஜனாதிபதி, வடக்கு முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகஜர்களும் பிரதேச செயலர் கிருஸ்ணாந்தராஜாவிடம் அந்த மக்கள் கையளித்தனர்.

இரணைத்தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரி முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் இரணைமாதாநகரில் வசித்து வருகின்றனர்.

இந்த மக்கள் நாள்தோறும் இரணைமாதா நகரிலிருந்து கடற்கரைக்கு சிரமங்களுக்கு மத்தியில் நடந்துசென்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

1992 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இரணைத்தீவில் இருந்து வெளியேறி 240 மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு இரனைமாதாநகரில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களே தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவை மீட்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என கோரி யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஆனால் இது வரை எந்தவொரு செயற்பாடுகளும் நடைபெறாத நிலையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தியுள்ளனர்.

இதேவேளை இரணைத்தீவில் உள்ள தேவாலயதின் திருவிழாவுக்கு மாத்திரம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


Comments