இராணுவத்தினரிடம் சென்ற மகனுக்கும் மருமகளுக்கும் என்ன நடந்தது? கதறி அழும் தாய்

Report Print Suman Suman in சமூகம்
68Shares

முல்லைத்தீவு வட்டுவாகல், செல்வபுரம் பகுதியில் வைத்து 2009.05.19 அன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் சிரிபி பஸ்லில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அவர்கள் எங்கே? தயவு செய்து இருவரையும் மீட்டுத்தாருங்கள் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஒருவரான கிருஸ்ணகுட்டி கலாவதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போரட்டம் இன்று புதன் கிழமை 17 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள 63 வயதான தாயொருவர் தனது கண்ணீர் கதையை கூறும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எனது மகன் கிருஸ்ணகுட்டி சுகுமாரன் மற்றும் அவரது மனைவி சுகுமாரன் கருணாதேவி இருவரும் முன்னாள் போராளிகள்.

இவர்களும் மேலும் பலரும் 2009 மே மாதம் 19ஆம் திகதி அருட்தந்தை ஒருவருடன் இராணுவத்தினரிடம் சென்றனர்.

அப்போது அங்கு வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் சிரிபி (இலங்கை போக்குவரத்துச் சபை) பேருந்தில் எனது மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட பலரையும் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதனை அங்கு நின்ற நூற்றுக்கணக்கான மக்களும் நேரில் கண்டுள்ளனர். அவ்வாறு பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?

எங்கு கொண்டு சென்றார்கள்? என்ன செய்தார்கள்? யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களாகின்றன.

ஏன் இதுவரை ஒரு முடிவும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்? எனக்கேள்வி எழுப்பிய கலாவதி எனது மருமகள் ஏற்றிச் செல்லப்பட்ட போது கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

நாங்கள் எட்டு வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகளை தேடி தேடி அலைந்து திரிகின்றோம், கடந்த ஆட்சிதான் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் தெடர்பில் எதுவும் கூறவில்லை என்றால் நல்லாட்சி அரசாவது எங்களின் பிள்ளைகளின் விடயத்தில் ஒரு முடிவை அறிவிக்கலாம்தானே.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தீர்வு காணப்படும் எனக் குறிப்பிட்ட நல்லாட்சி அரசாங்கம், கடந்த அரசு போன்றே கடந்து செல்கிறது.

நாங்களும் என்றும் போலவே எங்கள் பிள்ளைகளுக்கான போராட்டங்களிலும், பிள்ளைகளுக்கான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

என்னைப்பொறுத்தவரை நான் எனது மகன் மற்றும் மருமகள் இருவருக்காகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யு.என்.எச்.சி.ஆர் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு, புனர்வாழ்வு அமைச்சு, வவுனியா ஜோசம் படை முகாம், சிஐடி, கிளிநொச்சி இராணுவம், கிராம அலுவலர், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், என இன்னும் பலரிடம் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

தயவு செய்து நாங்கள் உயிரோடு இருக்கும் போதே எங்கள் பிள்ளைகளை தேடித்தாருங்கள், நாளாந்தம் குளிசைகளுடன் வாழ்கின்ற எங்களுக்கு எங்கள் பிள்ளைகளே ஒரேயொரு நிம்மதி.

அந்த நிம்மதியை ஏற்படுத்தி தாருங்கள். வருவார்கள் என ஏங்கி ஏங்கியே எங்கள் உடலும் உள்ளமும் மிக மோசமாக பலவீனப்பட்டுள்ளது.

எங்கள் பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? இல்லையென்றால் என்ன நடந்து? அரசு பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Comments