அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது அவர்களுக்கே தெரியாத நிலையே காணப்படுகிறது என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் சுட்டிக்காட்டினார்.
குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களினால் கடந்த இரண்டு தினங்களாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் தனது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் சிறந்த பாடசாலை. அண்மித்த பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை வலயக் கல்வி பணிமனையால் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறி பெற்றோரை ஆர்ப்பாட்டத்தில் இறக்கியவர்கள் யார்..?
இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்..? இதற்கான பின்னணி என்ன? என்பது கேள்வியாகவே இருக்கிறது.
ஆனால் பாடசாலைகளுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அது சம்மந்தமாக அதற்கான உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அல்லது பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும்.
மாறாக யாரிடமும் விசாரிக்காது கேள்விப்பட்டதை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தல் மாணவர்களின் கல்விக்கு இடைஞ்சலை ஏற்படுத்தல் என்பது கண்டிக்கத்தக்க விடயம்.
இது எந்தவித பிரச்சினைகளும் நடக்காத போது பிரச்சினைகள் நடந்தது போன்று சித்தரித்து மக்கள் முன்னிலையில் பெயர் எடுக்க பொய்களை சொல்லி வீண் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் விரும்பியதை வென்றெடுக்கலாம் என்று செயற்படுகின்றனர்.
நாங்கள் அரச அதிகாரிகள், அரச நிர்வாகம் செய்பவர்கள் அதனை உரிய முறையில் செய்வோம். ஆனால் அரசியல்வாதிகள் தங்களின் இருப்புக்களை நிலைநாட்ட நல்லவற்றை செய்வதை விடுத்து பொய்யான பிரச்சாரங்கள் மூலம் கல்வியில் விளையாட முனைதல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் தொடர்பில் இப்பாடசாலை அமெரிக்க யுசைட் திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்தின் மூலமும் அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் ஒரே பாடசாலைக்கு இரண்டு திட்டங்கள் வழங்குவதில் ஏதும் சிக்கல் வரும் என்ற காரணத்தினால் "ஏ" நிலையில் கிடைக்காவிட்டாலும் "பி" நிலை, "சி" நிலை என்று அபிவிருத்திக்காக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனை வித்தியாசமாக மக்களிடம் கூறி பிரச்சினைகளை உண்டாக்கி வலயக் கல்வி பணிப்பாளரை மாற்ற நினைப்போரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைய மக்களிடம் பொய் கூறுவோரின் நிலமைகளையும் மக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஷிம் தெரிவித்தார்.