கால்நடை வைத்திய அதிகாரி இல்லாமையால் பண்ணையாளர்கள் பாதிப்பு

Report Print Nesan Nesan in சமூகம்
19Shares

சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற அரச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் கடமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இப்பிரதேச பண்ணையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கிழக்கு மாகாண விவசாய, கால் நடை அபிவிருத்தி அமைச்சினால் 35 கால்நடை வைத்திய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களுள் 13 பேர் அம்பாறை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள போதிலும் சாய்ந்தமருது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு பொறுப்பாக கால் நடை வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அரச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் திறக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை நியமனம் மேற்கொள்ளப்படாமல் காரைதீவு அல்லது நிந்தவூர் பிரதேச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற கால்நடை வைத்திய அதிகாரி வாரத்திற்கு ஒருநாள் மாத்திரம் இங்கு வந்து பதில் கடமையாற்றுகிறார்.

இது தொடர்பில் பல தடவைகள் மாகாண சபை உயர் அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பிரதேசத்தில் ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற சுமார் அறுபது பண்ணையாளர்கள், இத்திணைக்களத்தின் சேவைகளை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சில சமயங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் திடீர் சுகவீனங்களின்போது அவற்றுக்கு சிகிச்சையளிக்க்க முடியாமல், தாம் திண்டாடுவதாகவும் இறப்புகளை சந்திப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments