மஹிந்த அமரவீரவின் கருத்துக்கு வேலையற்ற பட்டதாரிகள் கண்டனம்

Report Print Kumar in சமூகம்
52Shares

ஒட்டுமொத்த பட்டதாரிகளின் உணர்வுகளையும் ,தேவைகளையும் தொழில் உரிமையினையும் உதாசீணப்படுத்தும் வகையிலான உரையினை அமைச்சர் மகிந்த அமரவீர ஆற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் வேலையற்ற பட்டதாரிகள் தங்களை ஊடகங்கள் வாயிலாக பிரபல்யப்படுத்திக் கொள்வதற்கே இவ்வாறான போராட்டங்களை நடாத்துவதாக கூறியுள்ளார்.

அது அவரின் பொறுப்பற்ற கீழ்த்தரமான கருத்தாகவே தாங்கள் நோக்குவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அருவருக்கத்தக்க இந்த கருத்தை வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சொகுசு வாழ்க்கையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களது பிள்ளைகளுக்கு இவ்வாறான நிலையேற்படும்போதே தமது நிலைமை அவர்களுக்கு புரியும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 16ஆவது தினமாகவும் இன்று புதன்கிழமையும் காந்தி பூங்கா முன்பாக தொடர்ந்து வருகின்றது.

இன்று சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையிலும் பட்டங்களை பூர்த்திசெய்த பெருமளவான பெண்கள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1600க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் இவர்களில் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகவே உள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமது தமது கோரிக்கையினை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தினை எதுவித தளர்வும் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்குவதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி திறைசேரியில் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments