மக்களின் காணிகளை பறித்து வீதிகளில் அலைய விட்டிருக்கும் நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்...?

Report Print Gokulan Gokulan in சமூகம்
69Shares

யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விட்டிருப்பது பரிதாபமானது.

சொந்த இடங்களில் குடியேறி வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்.

வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனை தடுத்து விட்டு, படையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர்.

வன பாதுகாப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்வது குற்றம் என்றால் படையினருக்கு அந்த உரிமையை வழங்கியது யார்? படையினரின் கடமை பயிர்ச்செய்கை செய்வதா அல்லது மக்களை பாதுகாப்பதா?

எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மன்னார்- முசலி பிரதேச காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நேற்று (06) காலை கொழும்பில் நடாத்தியது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜாமுஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர்கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது,

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கில் மீளக்குடியேறும் தமிழ் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தினை தடுப்பதற்கான பல உபாயங்களை இனவாத சக்திகள் மிக நீண்ட காலமாகவே செய்து வருகின்றன.

வனவளங்களைப் பாதுகாத்தல் என்ற போலியான கோசத்தோடு தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை 'பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக' மாற்றுவது அவர்களின் பிரதான உபாயமாகும்.

முசலி பிரதேச முஸ்லிம் மக்களின் காணிகளையும் இதே உபாயத்தைக் கையாண்டே தற்போது பறிக்க முற்பட்டிருக்கின்றார்கள். இதற்காகவே 'மாவில்லு பேணற்காடு' என்ற புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஜனாதிபதி நடந்து விட்டார் என்பது கவலை தருகின்ற விடயமாகும்.

இந்த நாட்டில் வனவளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசியக் கொள்கை இருக்கிறது. அதற்கமைவாக ஒரு வன பாதுகாப்பு சட்டமும் இருக்கிறது. இந்த இரண்டிலுமே சொல்லப்பட்டுள்ள அடிப்படை விடயங்களை மீறும் வகையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செய்துள்ளார்.

வனபாதுகாப்பு வலயங்களை நிர்ணயிக்கும் போது அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளும் பொருளாதார வாழ்வாதார நலன்களும் மதிக்கப்பட வேண்டும் என தேசிய வனக் கொள்கை சொல்கிறது.

அது போலவே புதிய எல்லைகளை நிர்ணயிக்கும் போது போதிய கால அவகாசம் எடுத்து புதிய எல்லைகள் எவ்வாறு அமையப் போகிறது என்ற தெளிவான விளக்கங்களை பிரதேச செயலாளர் மக்களுக்க தெரியப்படுத்த வேண்டும்.

அத்தோடு புதிய எல்லைகள் அமைவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வாறானவை என்ற அறிவூட்டல்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என வன பாதுகாப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

கடந்த மார்ச் 13ம் திகதி ஒரு அறிவித்தலை முசலி பிரதேச செயலாளர் பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

பொதுமக்கள் தமது ஆட்சேபனைகளை வழங்குவதற்கான 14 நாள் கால அவகாசம் முடிவதற்கு முன்பாகவே மார்ச் 21ம் திகதி ஜனாதிபதி இவ்வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆக, நாட்டின் தேசிய வனக் கொள்கையினையும் அதனோடு தொடர்புபட்ட சட்ட நிபந்தனைகளையும் அப்பட்டமாக மீறும் வகையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முதலிலும் முசலி பிரதேச மக்களின் காணிகளை கையகப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 2012ம் ஆண்டிலும் செய்யப்பட்டிருந்தது. அதுவும் கூட மிகவும் இரகசியமாகவும், தந்திரமாகவும் செய்யப்பட்டிருந்தது.

அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மறிச்சிக்கட்டி - மரிக்கார்தீவு பிரதேச மக்கள் இன்றும் தமது காணி உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றங்களில் போராடி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முசலி பிரதேச மக்களுக்குச் சொந்தமான குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் ஏராளமானவை தற்போது பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காணிகளில் ஏறத்தாள 80 வீதமான காணிகளை முஸ்லிம் மக்கள் இழக்கிறார்கள்.

இதற்குப் புறம்பாக முஸ்லிம் - தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரச படையினர் கையகப்படுத்தி முகாமிட்டிருக்கிறார்கள்

முள்ளிக்குளம் எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முழுக்கிராமமுமே கடற்படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காணிகளை இழந்த ஏழைத்தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை தம்மிடம் மீளவும் கையளிக்குமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களாக பல கஸ்டங்களுக்கு மத்தியில் போராடி வருகிறார்கள்.

அதேபோலவே சிலாபத்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளையும் கடற்படையினர் கையகப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களிலும் இது நடந்திருக்கிறது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தமது சொந்த இடங்களில் மக்கள் குடியேறுவதற்கான அனுமதியினை மறுத்து விட்டு அக்காணிகளில் படையினர் விவசாயம் செய்து வருகிறார்கள்.

மக்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளின் அறுவடைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனை தடுத்து விட்டு, படையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர். இதனை நாம் எமது கள விஜயத்தின் போது நேரடியாகக் கண்டோம்.

இங்கு இரண்டு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் வன பாதுகாப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்வது குற்றம் என்றால் படையினருக்கு அந்த உரிமையை வழங்கியது யார்?

அடுத்ததாக படையினரின் கடமை பயிர்ச்செய்கை செய்வதா அல்லது மக்களை பாதுகாப்பதா?

ஜனாதிபதிக்கும் படையினருக்கும் மக்களே சம்பளம் வழங்குகின்றனர். எனவே அவர்களைப் பாதுகாப்பதுவே அவர்களின் கடமை.

இவ்வாறிருக்க மக்களின் உரிமைகளையும் காணிகளையும் பறித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவதை அனுமதிக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் இவ்வாறு அரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விடுவது பரிதாபமானது.

சொந்த இடங்களில் குடியேறி வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்.

எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

முசலி பிரதேச மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்.

மக்களின் நியாயங்களையும் உரிமைகளையும் கேட்டறிந்து பிரச்சினைளை நீதியாக தீர்க்கக் கூடிய வகையில் அதிகாரமுள்ள ஒரு ஆணைக்குழுவினை நிறுவி இப்பிரச்சினைக்கு சுமுகமான ஒரு முடிவினை காண ஜனாதிபதி உடனடியாக முன்வர வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

Comments