முள்ளிவாய்க்காலில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு!

Report Print Mohan Mohan in சமூகம்
1873Shares

சிங்கள மக்களின் சிறப்பு வழிபட்டு நிகழ்வு நேற்று(7) மாலை 5.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து சிறப்பித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற செயல்களுக்கு சிங்கள மக்கள் மன்னிப்பு கோரும் சிறப்பு வழிபாடாகவே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டினை நிகழ்த்திய பிரதான ஏற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கல் வழிபாட்டின்போது கூறுகையில்….

2009ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்குள் இவ்விடத்தில் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர்.

அப்பொழுது மக்கள் வாழ் விடங்களை இலக்கு வைத்து கொத்து கொத்தாக குண்டுகள் வீசப்பட்டது. அப்பாவி பொதுமக்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருநந்தது.

அச்சமயம் யுத்தம் நடைபெறாத பகுதியில் இருந்த மக்களாகிய நாம் பால்சோறு உண்டு சந்தோசக்களிப்பில் இருந்துள்ளோம்.

அவ்வாறன நிகழ்வுக்காக தற்பொழுது முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்.

மேலும் விழுந்துள்ள சமூகத்தை மீண்டும்; கட்டி எழுப்பவேண்டும். அதற்காக எழுந்து நிற்கும் சமூகம் குனிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.

அவ்வாறு குனிந்தால் மட்டுமே விழுந்த சமூகத்தை மீண்டும் எழுப்ப முடியும்.

இவ்வாறு எழுந்து நிற்கும் நாம் குனியும் போது எங்களுடைய வசதிகள் அனைத்தையும் விடுக்க வேண்டி வரலாம்.

அல்லது நாங்கள் தேசத்துரோகியாக கூட கருதப்படலாம்.

எவ்வாறாயினும் நாம் குனிந்தால் மட்டுமே வீழ்ந்தவர்களை எழுப்ப முடியும். அவ்வாறு வீழ்ந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்போம்.

இவ்வாறு வழிபாட்டின்போது கூறியுள்ளனர்.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் சிறப்பு வழிபாட்டினை மேற்கொள்வதற்கு என்ன காரணம்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்பாட்டாளர்கள் பதிலளிக்கையில்…

இவ்வாறான கிறிஸ்தவ திருச்சபை வழிபாட்டினை இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தி அங்குள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று பெரும்பாலான கிறிஸ்தவ சிங்கள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இந்த சிறப்பு வழிபாடு இன்று இடம்பெற்றுள்ளது என்று வழிபாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments