ஒட்டுசுட்டான்-கதலியார் சம்மளங்குளத்தை அண்மித்த பகுதியிலுள்ள குருவிச்சை நாச்சியார் ஆற்றுப்பாலம் வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கதலியார் சம்மளங்குளம் எனும் ஊரில் உள்ள குருவிச்சை நாச்சியார் ஆற்றுப்பாலத்தை அமைப்பது தொடர்பிலும் இருட்டுமடு பகுதியில் சுமார் 300 மீற்றர் நீளமான நீர்ப்பாசன வாய்க்கால் அமைப்பது தொடர்பிலுமான பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் மாகாண விவசாய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்கு அமைய இரண்டு வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்த வேலைகள் முழுமையடையும் என்று வடமாகண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் ரவிகரன் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேசுவரன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக்கு திரஞ்சன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வேலாயுதம்பிள்ளை பிறேமகுமார், மூத்த நீர்ப்பாசனப்பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், கமக்கார அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.