வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப்போராட்டம் 44ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீங்குமாறு வலியுறுத்தியும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டத்தினை, சாதகமான பதிலை வழங்கும் வரையில் கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாம் இன்று ஒன்றரை மாதங்களை கடந்தும் போராட்டத்தை முன்னெடுக்கின்ற போதும் கூட அரசாங்கம் உரிய பதிலைத் தரவில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகள் இடம்பெறுவதால் அப்பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தமது போராட்ட இடத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறும், விரைவில் விபரங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.