நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்! பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து!

Report Print Nivetha in சமூகம்
61Shares

கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை (09) நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்காக வரும் பக்தர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், ஒருவழி பாதை ஊடான போக்குவரத்துக்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதி ஆலயத்திற்குச் செல்லும் வழியாக புளியம்பொக்கணை சந்தி ஊடாக ஆலயத்திற்கு செல்லுமாறும், ஆலயத்தில் இருந்து தருமபுரம் - புளியம்பொக்கணை வீதி ஊடாக வெளிச் செல்லும் பாதையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கை கடைப்பிடிக்குமாறும் வாகன சாரதிகள் மற்றும் பக்தர்களிடம் ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.

இதேவேளை, ஆலயத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள போதும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிதல் மற்றும் பெறுமதியான உடமைகளை ஆலயத்திற்குள் கொண்டு வருதல் போன்றவற்றை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.

வருடாந்தம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவதனால், இவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகளவு பக்தர்கள் கூடுவதால் சமகாலத்தில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பாகவும் பக்தர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் ஆலய நிர்வாகத்தினால் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments