இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும், மன்னார் மாவட்டத்தின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரியும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான தே.பி.சிந்தாத்துரை தனது 73ஆவது வயதில் நேற்று(17) காலை இயற்கை எய்தினார்.
'மன்னார் சிந்தா' என அன்பாக அழைக்கப்படும் தே.பி.சிந்தாத்துரை இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக செயற்பட்டதோடு மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை இறுதிவரை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்டத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றியதோடு, பின்னர் இறுதிவரை மன்னார் மாவட்ட ஓய்வூதிய சங்கத் தலைவராகவும் செயற்பட்டார்.
அரசியல் ரீதியாக பல்வேறு செயற்பாடுகளையும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுத்ததோடு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக செயற்பட்டு வந்த போதும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவருடனும் அன்பாக பழகி பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தும் ஆற்றளை கொண்டிருந்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், அவரது இழப்பு எம் இனத்தின் பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.