பண்டிவிரிச்சான் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்

Report Print Yathu in சமூகம்
61Shares

மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை(17) மாலை 2.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் சன சமூக நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள், பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், போன்றோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததோடு,மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ரோஹான் குரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இதுதவிர மன்னார் பகுதியை சேர்ந்த ஒரு சில வர்த்தக பிரமுகர்கள் ஆகியோர் உட்பட கிராம மக்கள் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டு இந்த விளையாட்டு நிகழ்வுகளை கண்டு களித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

மருகிவரும் தமிழர்களின் கிராமிய விளையாட்டுக்கள் மென்மேலும் அழிந்து போகாமல் கிராமங்களில் வாழும் மக்கள் அதனை நினைவுகூருகின்றனர்.

அவ்வாறான விளையாட்டுக்களை நாம் அதிகமாய் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மேலான நோக்கோடு இந்த வள்ளுவர் சன சமூக நிலையத்தினர் என்னை அணுகிய வேளையிலே இதற்கான பூரண ஆதரவையும் என்னுடைய ஒத்துழைப்பையும் நான் வழங்கியிருந்தேன்.

விளையாட்டுக்கள் பொதுவாக நமது மனதிற்கும் உடலிற்கும் வலிமையை சேர்க்கிறது அவ்வாறான ஓர் பொழுதுபோக்கு இல்லாமையால் எமது வாலிபர்கள் திசைமாறும் சந்தர்ப்பங்கள், மற்றும் கவலையளிக்கும் நிகழ்வுகள் இன்று நடந்தேறிக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் இவ்வாறான ஓர் பாரிய இரண்டுநாள் விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்த சன சமூக நிலைய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கிராம மக்கள் அனைவரையும் தாம் பாராட்டுவதாகவும், விசேடமாக இன்று இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் போட்டியில் மிகவும் திறமையான வீரர்கள் திறமையாக விளையாடியதை பார்த்தபோது மிகவும் சந்தோஷமடைந்ததாகவும் அந்தவகையில் இன்று வெற்றியீட்டிய அணிக்கு எனது நிதியில் இருந்து ரூபாய் 50,000 ம், கயிறு இழுத்தல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற இரணை இலுப்பைக்குளம் ஆதவன் விளையாட்டுக் கழகத்திற்கு எனது அன்பளிப்பாக ரூபா 50,000 ம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு நிகழ்விற்கு அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் மரதன் ஓட்டத்திற்கும், சைக்கிள் ஓட்டத்திற்கும் முதலாம் பரிசில்களாக துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருப்பதோடு அதே வேளை ஒருதொகை பணமும் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments