கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற 03 பேருக்கும், வீதியில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டவருக்கும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை நேற்று (17) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற இருவரை கைது செய்துள்ளதுடன், டிப்பர் வாகனங்களையும் கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த இரண்டு சாரதிகளுக்கும் தலா ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், தலா பத்து நாட்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபடுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவரை கைது செய்த பொலிஸார் உழவு இயந்திரத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
அந்த நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டு 7 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி ஏ-9 வீதியில் மதுபோதையில் வீதியில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு வீதியில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டமைக்காக ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.