தமிழர்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற புதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது : கணேசன் பிரபாகரன்

Report Print Reeron Reeron in சமூகம்
137Shares

தமிழர்களை அழிக்க ஆயுதங்களை கொண்டு நடவடிக்கை எடுத்துவந்த அரசு தற்பொழுது அந்த வழியை மாற்றி மதுபானத்தை ஆயுதமாக கொண்டு செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வொஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா அரசு ஆயுதவழியில் தமிழ் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். தற்பொழுது ஆயுதங்களினால் கொன்று குவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு இல்லாமல் செய்து, பொருளாதார ரீதியாக தாக்கியது மட்டுமன்றி, மதுவுக்கு அடிமையாக்கி தமிழர்களை இந்த மண்ணில் இருந்து அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு கும்புறுமூலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள மதுபானசாலை உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்குரிய தகுந்த இடமாக வெளிக்கந்தை பகுதியில் காடுகள் நிறைந்த பகுதியிலுள்ளமையினால் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைத்திருக்கலாம்.

குறித்த மதுபானசாலை தமிழர் பிரதேசத்தில் அமைந்தமையானது தமிழ் சமூகத்தை திட்டமிட்டு அழிப்பதற்கான ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு ஆகும்.

கும்புறுமூலை கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் உண்மைத் தன்மையினை சமூகத்துக்கு வெளிக்கொனரும் வகையில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்களை குறித்த மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் குண்டர்கள் குழுவினரினால் தாக்கப்பட்டுள்ளதை ஜனநாயக போராளிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

ஊடக சுதந்திரம் நல்லாட்சியிலும் பேணப்படுகின்றதா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக்காத நல்லாட்சி அரசு மக்களின் குறைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்ள முடியும்.

கும்புறுமூலையில் அமைக்கப்படும் மதுபானசாலை உற்பத்தி நிலையத்தை நிறுத்தவேண்டுமென பத்திரிகைப் பிரச்சாரம் செய்த மட்டக்களப்பு அரசியல்வாதிகள் தற்பொழுது உரிய தரப்பிடம் காசு வாங்கியதும் சொல்லவேண்டிய விடயங்களை சொல்லாமல் இருப்பதானது சந்தேகத்தை ஏற்படுத்துக்கின்றது.

குறித்த மதுபானசாலை விடயத்தில் எவ்வாறு காசு வாங்கி ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என மக்களுக்குத் தெரியுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments