மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை நிறுத்துவதென தீர்மானம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
289Shares

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு குறித்த ஆய்வுக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில், இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

அதில் ஒன்றாகவே மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி திட்டத்தினால் வடமாராட்சி கிழக்கு மீனவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் அந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக கூட்டத்தின் நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மருதங்கேணி மக்கள் தொடக்கம் முதல் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தினால் பாதிப்புக்கள் உண்டாகாது என விஞ்ஞான ரீதியாக விளக்கமளிக்க இயலும் என அதிகாரிகள் கூறியிருந்தமையினால் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நாங்களும் மக்களும் கூடி பாதிப்புக்கள் இல்லை என விஞ்ஞானரீதியாக விளக்கினால் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என தீர்மானித்திருந்தனர்.

மேலும் இவ்வாறான திட்டத்தை வேறு இடம் ஒன்றில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயும்படி மக்கள் அப்போது கேட்டிருந்தனர்.

இந்நிலையில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு இன்று(நேற்று) எமக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதனை ஆராய்ந்து பார்த்ததில் மக்களுக்கு இருந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிப்பு உண்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு தீர்மானிக்கப்பட்டு அரசாங்க அதிபருக்கும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆறுமுகம் திட்டத்தை நிச்சயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் ஆறுமுகம் திட்டத்தின் ஊடாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது.

காரணம் ஆறுமுகம் திட்டத்தின் ஊடாக கிடைக்கும் நீரை குடிக்க இயலாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இரணைமடு திட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார்கள். அதாவது குறிப்பிட்ட அளவுக்கு கீழ் நீர்மட்டம் செல்லும் போது அங்கிருந்து நீரை பெற முடியாது என்பதே அந்த நிபந்தனை.

அப்படியானால் நீ ர் மட்டம் குறைந்தால் திடீரென குடிநீர் இல்லாமல் பாரிய ஆபத்து உண்டாகும். அவ்வாறான நிலையில் மா ற்று வழிக்காகவே மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் வந்தது.

ஆனால் அது சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் என்ற நிலையில் இப்போது நாங்கள் வேறு நீர் மூலங்களையே தேடவேண்டும் என கூறினார்.

மேலும் இந்த சந்திப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், நரா நிறுவனத்தினர், வடமராட் சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments