பட்டதாரிகளுக்கு அரசதொழில் கிடைக்கும் வரை போராடுவோம்: தென்னே ஞானானந்த தேரர்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரச தொழில் கிடைக்கும் வரை போராடுவோம். உங்களுக்காக நாம் குரலெழுப்புவோம் என இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த 85 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளைச் நேற்று சந்தித்து கலந்துரையாடுகையில் இவ்வாறு சூளுரைத்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் கடந்த மாதம் மாகாணசபை முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற ஆணையை கிழித்தெறிந்தமைக்காக திருமலை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை வந்துள்ளது.

அத்துடன், செவ்வாய் கிழமை நான் நீதிமன்றுக்குச் செல்ல வேண்டும். அதற்காக இன்று பகல் சட்டத்தரணிகள் சங்கத்தினரைச் சந்திக்க வேண்டும்.

அதனிடையே அம்பாறை மாவட்டத்திலுள்ள உங்களையும் சந்தித்துச் செல்லவே இங்கு வந்தேன். உங்களது போராட்டம் 85 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக செல்வதனையிட்டு பாராட்டுகின்றேன். மகிழ்ச்சியடைகின்றேன். எமது நம்பிக்கையில் வைராக்கியம் முக்கியம்.

இங்கு மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் இவ்வாறான வேலையில்லாப் பட்டதாரிகள் இருக்கின்றனர்.

இதில் சாதி,மத வேறுபாடு இல்லை. அனைவருக்குமாக நாம் குரலெழுப்புவோம். சேர்ந்து போராடுவோம்.

எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்டம் உள்ளது. அதாவது நுண்கலைப் பட்டதாரிகளுக்கான கூட்டமானது. எனவே இங்கிருந்தும் இருவர் அதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.

இந்த நிலையில்,எமது போராட்டத்தின் பலனாக இதுவரை 85 வீதமான பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் இன்னும் ஓரிருமாதத்தில் எமக்கு முழுமையான பச்சைக் கொடிக்காட்டலாம்.

எனவே நாம் தொடர்ந்து இறுதிவரை போராடுவோம் என இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பிலிருந்து வருகைதந்த தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பட்டதாரிகளுடன் மிகவும் அந்நியோன்யமாக சிரித்துப் பழகி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments