குறைந்த விலைக்கு கைத்தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

பதுளையில் குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இளைஞர்கள் இருவர் நேற்று எல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பல்வெல நகரில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து 53,087 ரூபா மீள் நிரப்பு அட்டைகளையும், 30 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் பக்கற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை அவர்களிடமிருந்து 25,000 ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு, அவர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இளைஞர்களை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ள போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முச்சக்கரவண்டி ஓட்டுனரான குறித்த இளைஞரிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளை அடுத்து மீள் நிரப்பு அட்டைகள் வெலிமடை மற்றும் ஊவா பரணகம ஆகிய பகுதிகளிலுள்ள சில வியாபார நிலையங்களை உடைத்து திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

பஸ்ஸர மற்றும் வெலிமடை பகுதியை சேர்ந்த குறித்த இரு இளைஞர்களும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுள் ஒருவர் கொமாண்டோ படையணியில் சேவையில் ஈடுபட்டவர் என்பதும் அவர் சேவையை விட்டு தப்பி ஓடி வந்தவர் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கைதானவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments