விநாயகமூர்த்திக்கு யாழில் பெருமளவிலானோர் அஞ்சலி!

Report Print Rakesh in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

விநாயகமூர்த்தியின் உடலம் இன்று காலை சாவகச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் பிற்பகல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

சுகவீனமடைந்திருந்த விநாயகமூர்த்தி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலம் கொழும்பில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் முதலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டிருந்தது.

இன்று காலை சாவகச்சேரி நகரப் பகுதியில் உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உடலம் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அஞ்சலியுரைகள் இடப்பெற்றன.

குறித்த அஞ்சலி உரைகளில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என்.சிறிக்காந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட பலரும் அஞ்சலி உரையாற்றினர்.

இறுதி ஊர்வல நிகழ்வுகளில் விநாயகமூர்த்தியின் உறவுகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.