யாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் திடீர் திருப்பம்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் நீரில் கலப்பதற்கு காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ். சுன்னாகத்திலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலப்பதற்குக் காரணமான மின் பிறப்பாக்கி நிறுவனத்தை கண்டறிந்து, அதன் அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுன்னாகத்திலும், அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்ந்தும் மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதவானால் மூன்று முக்கிய கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சுன்னாகம் மின் பிறப்பாக்கி நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் குடிநீர் வழங்க வேண்டும்.

நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு ஒயிலானது சுன்னாகம் மின்பிறப்பாக்கி நிலையத்திற்கு வடக்குத் திசையாக கழிவு ஒயில் நகர்ந்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் தாம் பாதிக்கப்படும் பட்சத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு முறையிடலாம்.

அவ்வாறு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபையும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள குடிநீரைப் பரிசோதித்து நீரைப் பருகலாமா, இல்லையா என்பதை அப்பகுதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலைய வளாகத்தில் இயங்கி வரும் இரண்டு மின்பிறப்பாக்கி நிலையங்களிலும் நிலத்தடி நீர் மாசுக்குக் காரணமான மின் பிறப்பாக்கி நிறுவனத்தைச் சுற்றுச்சூழல் அதிகார சபையினர் கண்டறிந்து நிறுவன அதிகாரிகளை சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஊடாக கைது செய்து அடுத்த வழக்குத் தவணையின் போது மன்றில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து குறித்த வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம்-27 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் நிலத்தடி நீரில் கலந்த காரணத்தால் வலிகாமம் பிரதேசத்தில் நான்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் கழிவு ஒயில் கலப்பிற்கு காரணமான மின்பிறப்பாக்கி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வைத்திய கலாநிதி இ. சிவசங்கர், சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன், சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா உள்ளிட்டோரும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன், சுன்னாகம் நீர் மாசு விவகாரத்தை கண்டித்துப் பல்வேறு போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த பாதிப்பு ஏற்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மல்லாகம் நீதிமன்றம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளமை, சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this video