வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பது கடினமானதல்ல!

Report Print Thamilin Tholan in சமூகம்

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெரும் தொகையான மக்களை அந்தப் பாதிப்பிலிருந்து வடமாகாண சபையூடாக மீட்டெடுப்பது அவ்வளவு கடினமான விடயமல்ல என புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் இ. ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய வடமாகாண சபை உறுப்பினராக யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ. ஜெயசேகரன் நேற்றுப் புதன்கிழமை (02) மாலை யாழ். வணிகர் கழகப் பணிமனையில் பதவியேற்றுள்ளார்.

பிரபல சட்டத்தரணியும், சமாதான நீதவானுமான வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இ.ஜெயசேகரன் சம்பிரதாயபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் சரியான முறையில் சிந்தித்து இந்தப் பாதிப்புக்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தியிருந்தால் மூன்று வருட காலத்திற்குள் எமது மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

ஆனால், இந்த விடயத்தில் நாம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் வணிகர் கழகத்தின் தலைவராகப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தியது போன்று மாகாண சபையிலும் புதுவிதமான திட்டங்களைச் செயற்படுத்த எண்ணியுள்ளேன்.

எனது திட்டங்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அடுத்த அமர்விலே கன்னிப் பேச்சாற்றவுள்ளேன். அதிலே சில விடயங்களைத் தெரிவிக்கவிருக்கின்றேன்.

எனது ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால், கடந்த காலப் போரினால் நாங்கள் மிகவும் நொந்து போயிருக்கிறோம். பல வகைகளில் துன்பங்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமது இனம் இன்னும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கிறது. எத்தனையோ குடும்பங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த பின்னரும் நாங்கள் எங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலையிலிருக்கிறோம்.

போரினால் அங்கவீனமுற்றவர்கள், பார்வையை இழந்தவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் எமக்கு அன்றாடம் கடிதங்கள் அனுப்பிய வண்ணமேயுள்ளனர்.

மாதம் தோறும் இடம்பெறும் வணிகர் கழகத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில் பெருந்தொகையான கடிதங்களை நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி புரிவதற்கு நாங்கள் பெரும் நிதி நிறுவனமல்ல. எமது வர்த்தகர்கள் எமக்களித்துள்ள பங்களிப்புடன் நாங்கள் இவ்வாறான பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் நாங்கள் எங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களை நன்கு ஆராய்ந்து ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நாங்கள் எங்களாலான உதவிகளை செய்து வருகிறோம்.

எதிர்காலத்தில் இந்த விடயத்தில் நான் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளேன். இந்த மக்களின் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும்.

எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியுள்ள இரு விடயங்கள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியாக நாங்கள் தன்னிறைவை எட்ட வேண்டும், எங்கள் புத்திக் கூர்மையின் அடிப்படையில் நாங்கள் முன்னேற வேண்டும்.

நாங்கள் பொருளாதார ரீதியாகப் பலம் கொண்டவர்களாக மிளிர வேண்டும். எம்மிடம் நிறைய வளங்கள் காணப்படுகின்றன.

அந்த வளங்களை நாங்கள் உரிய வகையில் பயன்படுத்தத் தவறியுள்ளோம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் இ. ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.