கிளிநொச்சி அறிவியல் நகரில் வங்கிக்கிளை ஒன்றை நிறுவுமாறு மக்கள் கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வங்கிக்கிளையொன்றை ஆரம்பித்து தருமாறு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி நகர மயமாக்கல் திட்டத்தின் கீழ் அறிவியல் நகர்ப் பகுதியில் பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியான தொழில் கல்வியை பெற்று வருகின்றனர்.

அத்தோடு இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் பழச்சாறு உற்பத்தித் தொழிற்சாலை ஆகியவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, பெருமளவிலான மக்கள் குறித்த பகுதியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் எந்த ஒரு வங்கிச் சேவைகளும் இன்மையால் இங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களும், பொதுமக்களும் 10கிலோ மீற்றர் தூரம் சென்று வங்கிச் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் நூறு ரூபாவிற்கும் குறைந்த பரீட்சைக் கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கூட இவ்வாறு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமக்கான வங்கிச் சேவையை விரைவில் பெற்றுத் தருமாறு குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.