யாழ். சுன்னாகத்தில் வாள் வெட்டு! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 23, 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்து இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன், மானிப்பாய் பகுதியிலும் இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் போராளிகள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீர் விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.