பயிர்செய்கைக்கான விதை நெல்லை மானிய விலையில் பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ஆம் மற்றும் 2018ஆம் காலபோகச் செய்கைக்கான விதை நெல்லை மானிய விலைகளில் பெற்றுத் தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளதோடு 3,200 ஏக்கர் நிலப்பரப்பிலேயே சிறுபோகச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதிலும் குடமுறுட்டிக்குளம், இரணைமடுக்குளம் ஆகியவற்றில் நீர் இன்மையால் அக்குளங்களின் கீழான சிறுபோகச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த காலபோகச் செய்கைக்கான காலம் அண்மித்துக் கொண்டிருப்பதனால் பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு விதைநெல் பாரிய பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிகளில் வருடாந்தம் சுமார் 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது வழமை.

எனினும், 2017,2018ம் ஆண்டு காலபோகத்தின் போது இந்த பயிர் நிலங்களில் பயிரிடுவதற்கு அதிகளவான விவசாயிகளிடம் விதை நெல் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தமக்கு காலபோகச் செய்கைக்கான விதைநெல்லை மானிய விலையில் பெற்றுத் தருவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.