வித்தியா படுகொலை வழக்கு! தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவு.. சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு

Report Print Murali Murali in சமூகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல்அட் பார் முறையில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புடன் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்களுக்கு சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர்களுக்கு மேலதிகமாக சிறைச்சாலை சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை விசாரணையின், வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், சந்தேகநபர்களுக்கான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என ட்ரயல்அட் பார் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, "சந்தேகநபர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் சிறைச்சாலையால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற வளாகத்துக்குள் எதிரிகளை யாரும் சந்திக்க அனுமதி வழங்க கூடாது.

சந்தேகநபர்களை அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மட்டுமே சந்திக்க முடியும்" என யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.