வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து! ஐவர் படுகாயம்: ஒருவர் ஆபத்தான நிலையில்..

Report Print Theesan in சமூகம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த ஐவரும் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை முல்லைத்தீவிலிருந்து, வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு வான் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி கடுமையான சேதங்களுக்கு உள்ளானதுடன் இதில் பயணித்த மலையாண்டி செல்வகுமார்(43), செல்வகுமார் லக்சன்(13), செல்வக்குமார் டிலக்சன்(11), ஜெயச்சந்திரன் றொசான்(16), லோகநாதன் டிலக்சன்(14) ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்திற்கு காரணமான சொகுசு வானின் சாரதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்துத் தொடர்பான பொலிஸாரின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற விதத்தில் இடம்பெற வேண்டும் என விபத்தில் படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.