மண்ணை காப்பாற்ற பொலிஸ் காவல் அரண் தேவை

Report Print Navoj in சமூகம்

வாகனேரி பகுதியில் பொலிஸார் காவல் அரணை அமைத்து சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முன்வருமாறு வாகனேரி தவணை கண்டம் விவசாய அமைப்பின் தலைவர் சி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

வாகனேரி பகுதியில் தினமும் மண் சூறையாடப்படுகின்றமை தொடர்பாக லங்காசிறி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

9ZMILkGTKVE?list=PLXDiYKtPlR7PgDQ7fSrM93gTXn3b1iUsE

கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட வாகனேரி பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.

இந்த விடயமாக உயர் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் மணல் அகழ்பவர்களிடமும் பேசியுள்ளோம். ஆனால் இவர்கள் இதனை நிறுத்துவதாக இல்லை.

எமது பகுதியில் மணல் அகழ்வதற்காக எந்தவித அனுமதிப் பத்திரமும் இல்லாமல் மணல்களை அகழ்கின்றனர். இரவு நேரங்களில் வந்து வாய்க்கால்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் முதிரை மரங்களையும் வெட்டி எடுத்து செல்கின்றார்கள்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பல தடவை முறைப்பாடுகளை செய்தோம். பொலிஸாரிடம் மணல் ஏற்றும் வாகனங்கள் இலக்கத்தையும் கொடுத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது வயல் அறுவடை செய்யப்பட்டு காணப்படும் விவசாய நிலங்களில் மணல்களை ஏற்றிச் செல்வதால் நாளடைவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

அத்துடன், வாய்க்காலில் இருந்து வரும் நீர் வயலை பாதிக்காத வகையில் அமைக்கப்பட்ட அணைக்கட்டுகளையும் உடைத்து செல்வதால் மாரி காலங்களில் வெள்ள நீரில் வயலை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இவ்வாறு இருந்தும் பொலிஸார் வருகை அறிந்து மண் அகழ்வில் ஈடுபவர்களின் தரகர்கள் பொலிஸ் நிலையம் தொடக்கம் மணல் அகழ்வு இடம்பெறும் இடம் வரை நின்று கொண்டு தகவல்களை வழங்குவார்கள்.

எமது நிலத்தை பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்கவும், விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லவும், விவசாயிகளின் குடும்பங்கள் நலன்பெற மணல் அகழ்வு மற்றும் மரம் வெட்டுவதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு இடம்பெறும் செயலை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு ஒரு விமோசனத்தை உயர் அதிகாரிகள் பிரதேச அரசியல்வாதிகள் வழங்குமாறு வேண்டுகின்றேன்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல்களையும், சட்டவிரோத செயல்களை தவிர்ப்பதற்காக விவசாயிகள் வாழ்க்கை திறம்பட பொலிஸ் அரணை அமைத்து தருமாறு வேண்டுகின்றோம் என வாகனேரி தவணை கண்டம் விவசாய அமைப்பின் தலைவர் சி.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸில் முறையிட்ட பின்னர் மண் கடத்தல் அதிகம்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு வந்தால் மறுநாள் அதிகமான வாகனங்கள் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பள்ளிமடு கண்டம் விவசாய அமைப்பின் உப தலைவர் ஏ.லெப்பைத்தம்பி தெரிவித்துள்ளார்.

வாகனேரி பகுதியில் தினமும் மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.இது தொடர்பாக நேற்று லங்காசிறி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிக்கையில்,

இரவோடு இரவாக மணல் அகழ்வதாக உரிய அதிகாரிகளுக்கு பல தடவை முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

எனவே உயர் அதிகாரிகள் இந்த விடயமாக நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மணல் அகழ்வதற்கு பயன்படுத்தும் உழவு இயந்திரத்தின் இலக்கத்தை எடுப்பதற்கு முற்பட்டால் இலக்கத்தை அழித்து விட்டு வருகின்றனர். இலக்கத்தை எங்களால் எடுக்க முடியவில்லை.

அவ்வாறு ஒரு வாகனத்தில் இலக்கத்தை எடுத்து பொலிஸ் நிலையத்தில் கொண்டு சென்று முறையிட்டால் இந்த இலக்கத்தில் எந்த வாகனங்களும் இல்லை என கூறுகின்றனர்.

மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்கள் வயல் நிலங்களால் ஊடறுத்துச் செல்வதால் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

எனவே உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மிகவிரைவாக நடவடிக்கை மேற்கொண்டு நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என பள்ளிமடு கண்டம் விவசாய அமைப்பின் உப தலைவர் ஏ.லெப்பைத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.