யாழில் யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் மருதங்கேணி முதலாம் கட்டை சந்திப் பகுதியில் இன்று காலை வேளையில் நடைபெற்றுள்ளது.

இதில் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிற்றம்பலம் சத்தியசீலன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிற்றம்பலம் சத்தியசீலன் என்ற நபர் வழமை போன்று காலை வேளையில் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது குடிமனை உள்ள பகுதியில் யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் யானையை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போதே யானை தாக்குதலுக்கு இலக்காகி இவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், இவருடன் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பளை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி - மருதங்கேணியில் மக்கள் குடியிருப்புக்கள் காணப்படும் பகுதியை நோக்கி யானை வந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் பயத்துடன் இருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சற்று பதற்றமான நிலை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த யானையை விரட்டுவதற்காக, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers