தந்தை, இரண்டு மகன்களுக்கு மரண தண்டணை! உறவினர்களின் உருக்கமான கோரிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினரால் வவுனியா புளியங்குளத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 01-06-2017 அன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள போதும் தங்களுக்கு சரியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கும் மரண தண்டனை கைதிகளின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக இருப்பதால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என புளியங்குளம் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை இவர்கள் கைவிட்டு சென்றுள்ளனர்.