குற்றவாளிகளை பாதுகாக்க பொலிஸ் பரிசோதகருக்கு உத்தரவிடும் வடக்கின் உயர் அதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோத செயல்களுக்கு உதவி செய்து வரும் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வடக்கில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மேற்கொண்டதாக கூறப்படும் வற்புறுத்தல் காரணமாக அவருக்கும் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கும் இடையில் மோதலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர், குற்றங்களுக்கு உதவி வரும் இரண்டு பேர், அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒரு நபர் என்போருடன் இணைந்து தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மது அருந்தியுள்ளார்.

அப்போது இந்த மூன்று பேருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத உத்தரவை அடுத்து கோபமடைந்த தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கடமைக்கு தடையேற்படுத்தும் தேவையற்ற உத்தரவுகளை வழங்குவதாக குறிப்பு எழுதி விட்டு, உதவி பொலிஸ் அத்தியட்சகரின் இல்லத்திற்கு எதிரில் பொலிஸ் குழு ஒன்றை கடமையில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதன் காரணமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் மதுபோதையில் இருந்த தமது நண்பர்கள் மூன்று பேரையும் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவர்களின் வீடுகளில் இறக்கி விட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்திருந்த நபர் தனது தாயாருக்கு வழங்கிய 5 லட்சம் ரூபா பணத்தையும் சகோதரிக்கு வழங்கிய 30 பவுண் தங்கத்தையும் அவர்களின் வீட்டுக்கு சென்று திரும்ப பெற்று வருமாறு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பொலிஸாருக்கு உத்தரவிடச் செய்துள்ளார்.

அப்போது பொலிஸ் முறைப்பாடுகளுக்கு பொறுப்பாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர், நீதிமன்ற உத்தரவின்றி அப்படியான ஒன்றை செய்ய முடியாது எனக் கூறி உத்தரவை நிராகரித்துள்ளார்.

இதனையடுத்து “ இன்ஸ்பெக்ஸன் வரும் நாளில் உன்னை கவனித்து கொள்கிறேன்“ என உதவி பொலிஸ் அத்தியட்சகர் அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers