கிழக்கு மாகாண தபால் ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றுகின்ற தபால் ஊழியர்கள் தமக்கான சம்பள நிலுவையினை வழங்கக் கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றையும் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கவனயீர்ப்புப் பேரணி மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கல்முனை வீதி வழியாக கிழக்கு மாகாண தபால் அத்தியட்சகர் காரியாலயம் வரையில் சென்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் இறுதியில் தபால் அத்தியட்சகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டுக்கு பின்னர் நியமனம் பெற்ற தபால் ஊழியர்களுக்கு 2010ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தினால் சம்பளம் குறைக்கப்பட்ட போதிலும் அது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையில் அதிகளவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு தொகை பணம் ஊழியர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டிருந்தது, இது எமக்கு கடந்த காலத்தில் செய்யப்பட்ட பெரும் அநீதி என குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்களில் கடமையாற்றும் 104 பேருக்கு சுமார் 87 லட்சம் ரூபா வழங்க வேண்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒருவருக்கு 4,000 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சீ.உமேஸ்காந்த் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு தமக்கான சம்பளத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், அது தவறும் பட்சத்தில் தலைமை தபால் காரியாலயத்திற்கு முன்பாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த நேரிடும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.