சிரமத்தை எதிர்நோக்கும் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திற்கு வரும் பயனாளர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழான வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் பல மணிநேரமாக காக்க வைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.30 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. உயரம், நிறை போன்றவற்றுடன் புகைப்படம் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன், அடுத்ததாக இரத்தப்பரிசோதனை செய்யப்பட்டு வைத்திய அதிகாரியின் மூலம் கண்பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது.

ஆனால் மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர் காலை 8.30 மணிதொடக்கம் 10.00 மணிவரையும் சேவையாற்றிவிட்டு புறப்பட்டு சென்று விடுவதாகவும், பின்பு மதியம் 1.00 மணிக்கு மீண்டும் வரும் மருத்துவ அதிகாரி பரிசோதனைகளை முடித்து சான்றிதழ் வழங்க மாலையாகி விடுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மருத்துவ சான்றிதழுக்காக ஒரு நபரிடம் இருந்து 750 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன் உரிய தொகைக்கு மேலதிகமாக பணம் கொடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் மிகுதிப்பணம் தறப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டள்ளனர்.

இவ்வாறு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற்றுக்கொள்ள வரும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், பெண்கள் அனைவரும் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.