வவுனியா - நித்திய நகர் கிராமத்திற்கு செல்லும் பாதை சீரின்மையால் மக்கள் அவதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - நித்தியநகர் கிராமத்திற்கு செல்லும் பாதை நீண்டகாலமாக செப்பனிடப்படாத நிலையில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பூவரசங்குளத்திலிருந்து மணியர்குளம், நித்தியநகர் மற்றும் கந்தசாமி நகரூடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதி நீண்ட நாட்களாக திருத்தப்படாமல் உள்ளது.

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த 1998ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். இந்த நிலையில் வீதி சீரின்மையால் எமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

இதேவேளை பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் வரையில் நடந்து செல்லவேண்டியிருப்பதால் மழை காலங்களில் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன், எமது கிராமத்தில் வைத்தியசாலை வசதி இன்மையால் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் பிரதேசசபை மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் பாதைகள் சீர் செய்து தரப்படவில்லை எனவும், பாதைகள் சீரின்மையால் அதை காரணம் காட்டி பேருந்துகள் தமது கிராமத்திற்கு வருவதில்லை என நித்திய நகர் கிராமத்தின் அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு நித்தியநகர் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.