யாழ். நகரில் உணவகங்களின் நிலை! பாராமுகமாக இருப்பது எதற்காக?

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்.பேருந்து நிலையத்தின் பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி கொண்டிருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் உணவு உண்ணும் போது கழிவுகள் அகற்றப்படுவதாகவும், இவ்வாறான உணகங்களின் சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகரசபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

யாழ்.நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சில பாரிய சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி கொண்டிருக்கின்றது.

இந்த உணவகங்களில் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்படவில்லை. சமயலறை கழிவுகள் நேரடியாக வெள்ள வாய்க்கால்களில் விடப்படுகின்றது.

வெள்ளவாய்க்காலில் விடப்படும் சமயலறை கழிவுகள் அங்கேயே தேங்கி நின்று துர்நாற்றத்தை உண்டாக்குகின்றது. மேலும் வாடிக்கையாளர்கள் உணவு உண்ணும் போது கழிவுகளை எடுத்துவந்து வெள்ளவாய்க்கால்களில் கொட்டுகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேற்படி உணவகங்களுக்கு முன்னால் உள்ள வெள்ளவாய்க்காலில் இருந்து 4 உழவு இயந்திரங்களில் யாழ்.மாநகரசபை கழிவுகளை அகற்றியிருக்கின்றது.

இருந்தும் மேற்படி உணவகங்கள் மீது நடவடிக்கை எக்கப்படவில்லை. அதேபோல் மேற்படி உணவகங்களுக்கு ஏ தர சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஏ தர சான்றிதழ் வழங்கப்படுவதாக இருந்தால் அந்த உணவகங்களின் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அது கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த உணவகங்களில் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே இவ்வாறு சுகாதார சீர்கேட்டுடன், உரிய கழிவகற்றல் ஒழுங்குகள் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் உணவகங்கள் தொடர்பாக யாழ்.மாநகரசபை குறிப்பாக யாழ்.மாநகரசபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பது எதற்காக? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளதாக கூறி வீடுகளுக்கு சென்று குற்றம் கண்டுபிடிக்கும் யாழ்.மாநகரசபை சுகாதார பரிசோதகர்கள், இவ்வாறான பாரிய சுகாதார சீர்கேடுகளை கண்டும் காணாததுபோல் நடந்து கொள்வது எதற்காக? எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.