சைட்டத்திற்கெதிரான வேலைநிறுத்தத்திற்கு யாழில் ஆதரவு

Report Print Thamilin Tholan in சமூகம்

சைட்டத்திற்கெதிராக நாளை நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்திற்குட்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க உபதலைவர் வைத்திய கலாநிதி எஸ்.மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த எட்டு மாதங்களாக சைட்டத்திற்கெதிரான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சைட்டத்தின் மூலம் கல்வி கற்று வெளியேறும் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகவுள்ளது. அத்துடன் இந்த கல்விக்காக உள்வாங்கப்படும் மாணவர்களின் கல்வித்தரம் அடிப்படைத் தகுதியற்றதாக அமைந்துள்ளது.

இவ்வாறான தகுதிகளையுடையவர்கள் எதிர்காலத்தில் வைத்தியர்களாக உருவாகி நாட்டில் பணியாற்றும் போது மக்கள் எவ்வாறான மருந்துகளைப் பயன்படுத்தப் போகின்றார்கள்?

சைட்டம் தொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் நியமித்த குழுவில் குறைப்பாடுகள் உள்ளன.

சைட்டத்தினை நியாயமாக்கித் தொடர்வதற்கான ஒரு செயற்பாட்டினையே அந்தக் குழு பரிந்துரைக்கின்றது.

சைட்டம் தனியார் கல்லூரிகளை அரசாங்கமே விலை கொடுத்து உள்வாங்கி, தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்வி பயிலுவதற்கான வாய்ப்பினை வழங்க அரசாங்கம் முனைகிறது.

மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்படும் பணத்தையே சைட்டம் தனியார் கல்லூரிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முனைகிறது. எனவே, சைட்டத்தை இல்லாதொழிப்பதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அரசாங்க வைத்தியசாலைகளில் நாம் நோயாளர்களை அணுகி கல்வி கற்ற காலத்திலிருந்ததைப் போன்ற செயற்பாடு தனியார் மருத்துவமனைகளில் நிச்சயம் நிகழ வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.