பொது இடங்களில் புகைபிடித்த ஏழு பேருக்கு சாவகச்சேரி நீதவானின் உத்தரவு

Report Print Thamilin Tholan in சமூகம்

பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பொது இடங்களில் புகைபிடித்த ஏழு பேருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதவானால் 14 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகச் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் திடீர் பரிசோதனைகள் நடாத்தினர். இதன் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் புகைபிடித்த எழுவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்குகளை தொடர்பில் இன்று புதன்கிழமை(20) நீதவான் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இதன் போது குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் மொத்தம் 14 ஆயிரம் ரூபாவை நீதவான் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளார்.