வவுனியா வடக்கு புளியங்குளம் ஆரம்ப பாடசாலையின் அவலநிலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - வடக்கு வலயத்திற்குட்பட்ட புளியங்குளம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களது இணைப்பாட விதானச் செயற்பாட்டுக்கான கொட்டகை சிதைவடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பாடசாலை புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இருந்து பிரிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு யூன் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தரம் 1 முதல் 5 வரையிலான இப் பாடசாலையில் தற்போது 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

ஒரு கட்டடத்தில் சிறியதாக பிரிக்கப்பட்ட 5 வகுப்பறைகளை மாத்திரம் கொண்டதாக காணப்படும் குறித்த பாடசாலையில், மாணவர்களின் இணைப்பாட விதானச் செயற்பாடுகள், மாணவர் மன்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.

அது வேயப்படாது, ஓட்டைகள் நிறைந்ததாக காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

மாணவர்கள் இணைப்பாட விதானச் செயற்பாட்டுக்காக கொட்டகைக்குள் வருகின்ற போது, அக்கொட்டகைக்குள் இருந்து வானத்தைப் பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும், மழை மற்றும் வெயில் என்பவற்றுக்கு மத்தியிலேயே தமது இணைப்பாட விதானச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாரிகாலம் ஆரம்பித்துள்ளமையால் நேரடியாக கொட்டகைக்குள் மழை நீர் வருவதனால், மாணவர்களது இணைப்பாட விதான ஆற்றல்களை மேலும் வளப்படுத்த முடியாது, வெறும் புத்தக்கல்வியுடனேயே அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும், இதனால் மாணவர்களது ஆற்றல் மழுங்கடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இப் பாடசாலையை அண்மித்தாக பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 83 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளமையால் அடுத்த வருடம் பாடசாலை ஆரம்பிக்கும் போது அந்த குடும்பங்களினது பிள்ளைகளும் குறித்த பாடசாலையிலேயே கல்வியை தொடரவுள்ளதால் வகுப்பறைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படவாய்புள்ளதாகவும் அப்பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.