11 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையினர் வழங்கிய தகவல்கள் பொய்யானவை

Report Print Kamel Kamel in சமூகம்

11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையினர் வழங்கிய தகவல்கள் பொய்யானவை என குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 11 பேர் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் கடற்படையினர் வழங்கிய தகவல்கள் பொய்யானவை என குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினர் பொய்யான தகவல்களை வழங்கியதனால் விசாரணைகள் தாமதமாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சட்ட ரீதியாக கோரிக்கை விடுக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கெப்டன் டி.கே.பீ. தசாநாயக்க உள்ளிட்ட ஆறு பேரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.