இரவு நேர பயணிகள் போக்குவரத்துச் சேவையில் திருப்தியில்லை: ஸ்ரீதரன் விசனம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் இரவு நேரங்களில் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முறையாக அமுல்படுத்துவதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர பயணிகள் பேருந்து சேவைகள் இரவு 7 மணிக்குப் பிறகு மட்டுப்படுத்தப்படுவதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நுவரெலியா - ஹட்டன் , டயகம - தலவாக்கலை போன்ற பாதையூடான இரவு சேவைகள் முற்றாக இடம் பெறுவதில்லை.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மத்திய மாகாண தனியார் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உரிய கரிசனை செலுத்த வேண்டும்.

ஹட்டன் - நுவரெலியா வீதியில் தனியார் பேருந்து சேவைகள் முறையாக இடம் பெறாத காரணத்தினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளையும் பங்கு பற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் குறித்த பல விடயங்கை ஆராயமுடியும்.

இதேவேளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பாதையைத் துரிதமாக செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச ஆகியோரின் இணை தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.